
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் தொடங்கி நவம்பர் 19 வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் இடது கை பவுலர்களுக்கு எதிராக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடுமாறுவது, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வலுவாக இல்லாதது போன்றவை இந்தியாவுக்கு பின்னடைவாக இருக்கிறது.
அத்துடன் ஃபீல்டிங் துறையில் முக்கிய நேரங்களில் கேட்ச்களை தவற விடுவதில் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை என்பதையும் இந்திய வீரர்கள் சமீபத்திய நேபாள் ஆசிய கோப்பை போட்டியில் காண்பித்தனர். அதனால் சொந்த மண்ணில் நடைபெற்றாலும் இம்முறையும் இந்தியா உலக கோப்பையை வெல்லப்போவதில்லை இன்று நிறைய இந்திய ரசிகர்களே சமூக வலைதளங்களில் பேசுவதை பார்க்க முடிகிறது. இருப்பினும் 2019 உலகக்கோப்பையில் 5 சதங்கள் அடித்தது போல் இம்முறை கேப்டனாக ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டு சொந்த மண்ணில் சாதித்து காட்டுவார் என்று யுவராஜ் சிங் போன்ற முன்னாள் வீரர்களும் ரசிகர்களிடம் ஒரு நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் 2023 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுக்கும் அளவுக்கு ரோஹித் சர்மா சரியான கேப்டன் கிடையாது என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் பிளேவெட் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பற்றி நான் கவலைப்படுகிறேன். குறிப்பாக அந்த பதவியில் ரோகித் சர்மா ஒட்டிக்கொண்டு மட்டும் இருப்பதாக கருதுகிறேன். என்னை கேட்டால் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியில் இப்போது இந்தியா ஒரு நகர்வை செய்திருக்கலாம் என்று நினைத்தேன். ஏனெனில் தற்போது அனைத்தும் இந்தியாவுக்கு தவறாக நடப்பதாக நான் பார்க்கிறேன்.