
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று பல்லகலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் தனி ஒரு வீரராக இந்தியாவை கட்டுப்படுத்தி தாக்கத்தை உருவாக்கி இருக்கிறார், பாகிஸ்தான் அணியின் இளம் இடதுகை பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அஃப்ரிடி.
இந்த போட்டி மழை அச்சுறுத்தலுக்கு இடையே நடைபெற்றது. மழைக்கான மேகமூட்டம் இருந்த காரணத்தினால் பந்துவீச்சுக்கு வசதியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தார்.
இந்த நிலையில் முதல் நான்கு ஓவர்களுக்கு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சை இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக சமாளித்து விளையாடியதோடு தேவையான ரன்களையும் கொண்டு வந்தார்கள். இதற்கிடையே மழை வந்து குறுக்கிட்டு ஆட்டம் சிறிது தாமதிக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது.