
ரோஹித் சர்மா, தோனியை போல நிதானமான கேப்டன் என பெயர் பெற்றவர். எவ்வளவு கூலான கேப்டனாக இருந்தாலும், ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் வீரர்கள் தவறு செய்தால், அவர்களுக்கும் கோபம் வரும் என்பதற்கு ரோஹித் சர்மா விதிவிலக்கல்ல.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியின்போது ரோஹித் சர்மா, அப்படித்தான் கடுப்பாகி பந்தை எட்டி உதைந்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 186 ரன்கள் அடிக்க, 187 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 178 ரன்கள் அடித்து, 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 59 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் 3ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோவ்மன் பவல் மற்றும் நிகோலஸ் பூரன் ஆகிய இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்து ஆடி வேகமாக ஸ்கோரை உயர்த்தினர். அந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 10 ஓவரில் 100 ரன்களை குவித்தனர். 19ஆவது ஓவரில் பூரன் 62 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பவல் 68 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தும் வெஸ்ட் இண்டீஸால் வெற்றி பெற முடியவில்லை.