
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு அந்த அணிக்கு எதிராக 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருந்த போதிலும் 2 க்கு 1 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இதை தொடர்ந்து இந்த சுற்றுப்பயணத்தில் இரண்டாவதாக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்க உள்ளது.
முன்னதாக இந்த சுற்றுப்பயணம் துவங்குவதற்கு முன்பாகவே இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலியின் பதவி பறிக்கப்பட்டு அந்த பதவி துணைக் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துள்ள நிலையில், டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இதனால் இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.