உமேஷ் யாதவை மீண்டும் அணியில் சேர்த்தது குறித்து ரோஹித் சர்மா விளக்கம்!
மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு உமேஷ் யாதவை டி20 அணியில் எடுத்தது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. டி20 உலக கோப்பைக்கு முன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்குமே இது சிறந்த முன் தயாரிப்பாக இருக்கும்.
வரும் 20, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முறையே மொஹாலி, நாக்பூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாத முகமது ஷமி, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடர்களில் ஆடவிருந்தார்.
Trending
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் வரும் 20ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், முகமது ஷமிக்கு கொரோனா உறுதியானது. அதனால் இந்த டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக மற்றொரு சீனியர் ஃபாஸ்ட் பவுலரான உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடைசியாக கடந்த 2019 பிப்ரவரியில் சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய உமேஷ் யாதவ், மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவரும் நிலையில், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆவேஷ் கான் ஆகிய வீரர்கள் எல்லாம் இருக்கும்போது, உமேஷ் யாதவை மீண்டும் டி20 அணியில் எடுத்தது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “சில ஆப்சன்கள் உள்ளன. பிரசித் கிருஷ்ணா காயம்; சிராஜ் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ஆசிய கோப்பையின் போது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆவேஷ் கான் முழு ஃபிட்னெஸை பெற கால அவகாசம் வேண்டும். உமேஷ், ஷமி போன்ற பவுலர்கள் அனைத்து ஃபார்மட்டுக்குமான பவுலர்கள். ஏற்கனவே தங்களை நிரூபித்த பவுலர்கள் அவர்கள்.
இளம் வீரர்கள் தான் தங்களை நிரூபிக்க வேண்டும். அனுபவ வீரர்கள் எல்லாம் ஃபிட்டாக இருந்தால் போதும். அவர்களது ஃபார்மை பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை. உமேஷ் யாதவ் ஐபிஎல்லில் எவ்வளவு சிறப்பாக ஆடினார் என்பதை பார்த்தோம். புதிய பந்தில் நல்ல வேகத்தில் நன்றாக ஸ்விங் செய்து வீசக்கூடியவர் உமேஷ் யாதவ்” என்று தெரிவித்தார்.
இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்ப்ரித் பும்ரா, உமேஷ் யாதவ்.
Win Big, Make Your Cricket Tales Now