
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியிருந்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் மட்டுமே குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக மொயின் அலி 47 ரன்களையும், டேவிட் வில்லி 41 ரன்களும் அடித்தனர்.
அதனை தொடர்ந்து 247 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 38.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது தொடரினை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற நிலையில் சமன் செய்துள்ளது.