ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இதில் நேற்று டெல்லியில் நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஃப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டு இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. உலகக்கோப்பையில் அந்த அணியின் 2ஆவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் 273 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹுத் சர்மாவும், இஷான் கிஷனும் களம் புகுந்தனர். ஆஃப்கானிஸ்தானின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்த ரோஹித் சர்மா சிக்சரும், பவுண்டரியுமாக தெறிக்கவிட்டு ரசிகர்களை குதூகலத்தில் மிதக்க வைத்தார்.