
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் செஞ்சூரியன் நகரில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா தடுமாற்றமாக விளையாடி முதல் நாள் முடிவில் 208/8 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா 5, ஜெய்ஷ்வால் 17, கில் 2, விராட் கோலி 38, ஸ்ரேயாஸ் ஐயர் 31 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்தனர். இதனால் 200 ரன்கள் தாண்டாது என்று ரசிகர்கள் கவலையடைந்த போதிலும் மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய கேஎல் ராகுல் அரை சதம் கடந்து 70 ரன்கள் குவித்து இந்தியாவை காப்பாற்ற போராடி வருகிறார்.
முன்னதாக நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பையில் 597 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா இந்தியா இறுதிப்போட்டி வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அந்த வகையில் நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் இந்த தொடரிலும் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.