
இங்கிலாந்தில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான டி20 பிளாஸ்ட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் சர்ரே மற்றும் டர்ஹாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சர்ரே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவிக்க, அதன்படி களமிறங்கிட டர்ஹாம் அணியில் மைக்கேல் ஜோன்ஸ், ஆஷ்டன் டர்னர், பாஸ் டி லீட் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் டர்ஹாம் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மைக்கேல் ஜோன்ஸ் 37 ரன்களையும், ஆஷ்டன் டர்னர் 26 ரன்களையும், பாஸ் டி லீட் 24 ரன்களையும் சேர்த்தனர். சர்ரே அணி தரப்பில் டேனியல் வோரல், ரீஸ் டாப்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சாம் கரண், டாம் கரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சர்ரே அணியிலும் டாப் ஆர்டர் வீரர்கள் வில் ஜேக்ஸ், லௌரி எவான்ஸ், ரோரி பர்ன்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த டோமினிக் சிப்லி மற்றும் சாம் கரண் இணை அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.