
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியானது மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இரு அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இத்தொடரின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ரோவ்மன் பாவெல் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ரோவ்மன் பவல் இதுவரை 95 டி20 சர்வதேச போட்டிகளில் 83 இன்னிங்ஸ்களில் 1875 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் 25 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ச்ர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ரன்களைக் குவித்த இரண்டாவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.