
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், 7 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் மும்பை, பெங்களூரு, லக்னோ, டெல்லி, ஜெய்ப்பூர், அஹ்மதாபாத் நகரங்களில் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மே 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்பட்டுள்ளது. சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி, கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர்கள் ரோவ்மன் பாவல் மற்றும் மொயீன் அலி ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகக்கூடும் என்று கூறப்படுகிறது. இதில் ரோவ்மன் பாவெல் சக வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் துபாயில் இருக்கும் நிலையில், இத்தொடரை அவர் தவற விடுவார் என்று கூறப்படுகிறது.