ரஷீத், ராய் அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2ஆவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று 1-1 என சமனிலை பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 போட்டி மான்செஸ்டரில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
Trending
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தார். அவர் 57 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 76 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஆதில் ரஷித் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் ஒரு சிக்சர், 12 பவுண்டரி உள்பட 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த டேவிட் மலான் 31 ரன்னும், ஜோஸ் பட்லர், மார்கன் தலா 21 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், 19.4 ஓவர்களில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.
ஆட்ட நாயகன் விருது ஜேசன் ராய்க்கும், தொடர் நாயகன் விருது லிவிங்ஸ்டோனுக்கும் வழங்கப்பட்டது. ஏற்கனவே ஒருநாள் தொடரில் பாகிஸ்தானை 3-0 என இங்கிலாந்து ஒயிட்வாஷ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now