WPL 2024 Final : டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் இன்றுடன் நிறைவடைந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முன்னேறின. அதன்படி இன்று அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் மெக் லெனிங் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு வழக்கம்போல் ஷஃபாலி வர்மா - கேப்டன் மெக் லெனிங் தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் முதல் ஆறு ஓவர்களிலேயே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்களைச் சேர்த்து அசத்தியது.
Trending
அதன்பின் இப்போட்டியில் அரைசதத்தை நெருங்கிக்கொண்டிருந்த ஷஃபாலி வர்மா 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 44 ரன்கள் சேர்த்த நிலையில் சிக்சர் அடிக்க முயற்சித்து ஜார்ஜியே வேர்ஹாமிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் அலிஸ் கேப்ஸி ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ரன்கள் ஏதுமின்றி சோஃபி மோலினக்ஸ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் 64 ரன்கள் வரை விக்கெட் ஏதுமின்றி விளையாடி வந்த டெல்லி அணி அந்த ஓவரின் முடிவில் 64 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாகியது. அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட கேப்டன் மெக் லெனிங் 23 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 8 ரன்களில் மரிஸான் கேப்பும், 3 ரன்களில் ஜெஸ் ஜோனசெனும், 5 ரன்களில் மின்னு மணியும் தங்கள் விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளாலும் ஆர்சிபி அணியின் சுழற்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்சிபி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷ்ரெயங்கா பாட்டில் 4 விக்கெட்டுகளையும், சோஃபி மோலினக்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு வழக்கம் போல் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் சோஃபி டிவைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் முதல் பந்தில் இருந்தே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சிறுக சிறுக உயர்த்தி வந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை கைவிட்ட சோஃபி டிவைன் பவுண்டரியும், சிக்சர்களையும் விளாசித் தள்ளினார்.
இதனால் ஆர்சிபி அணி எளிதாக இலக்கை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 32 ரன்கள் எடுத்திருந்த சோஃபி டிவைனின் விக்கெட்டை ஷிகா பாண்டே கைப்பற்றி டெல்லி அணிக்கு ஆறுதல் அளித்தார். இதையடுத்து ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்த எல்லிஸ் பெர்ரியும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி மேற்கொண்டு விக்கெட்டுகள் ஏதும் விழாமல் பார்த்துக்கொண்டார்.
இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் பந்துகளை தேர்ந்தெடுத்து தங்கள் ஷாட்டுகளை விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் அதிரடியாக விளையாட முயற்சித்து தூக்கி அடித்த ஸ்மிருதி மந்தனா 31 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த எல்லிஸ் பெர்ரி - ரிச்சா கோஷ் இணை பொறுப்புடன் விளையாட ஆர்சிபி அணியின் வெற்றியும் எளிதானது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எல்லிஸ் பெர்ரி 4 பவுண்டரிகளுடன் 35 ரன்களையும், ரிச்சா கோஷ் இரண்டு பவுண்டரிகளுடன் 17 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசேய்ததுடன் டபிள்யூபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now