
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ,ராஜஸ்தான் ராயல்ஸ் ம்ற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், மீதமுள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்காக கடுமையாக போராடி வருகின்றன.
இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளின் காரணமாக பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் இழந்துள்ளது. அந்த அணி இத்தொடரில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 3 வெற்றி 9 தோல்விகள் என 6 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேற்கொண்டு கேப்டன் சஞ்சு சாம்சனும் காயம் காரணமாக விளையாடாமல் இருப்பது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அணியின் பேட்டர் நிதீஷ் ரானா காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் நிதீஷ் ரானா விளையாடிய நிலையில் காயத்தைச் சந்தித்தார். இதன் காரணமாக கடந்த போட்டியில் குனால் சிங் ரத்தோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.