
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் இந்திய அணிக்காக டி20, ஒருநாள் அணிகளில் விளையாடி வரும் நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் இந்திய அணி அனைத்து வடிவங்களுக்கான கிரிக்கெட் அணியிலும் ருதுராஜ் கெய்க்வாட் தனது இடத்தை உறுதி செய்வார் என்று சொல்லப்படுகிறது.
அண்மையில் முடிவடைந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி சார்பாக அதிக ரன்களை விளாசி அசத்தினார் ருதுராஜ் கெய்க்வாட். 5 போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 223 ரன்களை விளாசி தள்ளினார். இதன் மூலம் இருதரப்பு டி20 தொடரில் அதிக ரன்களை விளாசிய 3ஆவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்நிலையில் சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் அபரிவிதமான வளர்ச்சியை பெற்றுள்ளார். டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்ததோடு 763 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.