
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி அங்கு நடைபெற்ற டி20 தொடரை சமன் செய்து, அடுத்ததாக நடந்த ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்றது. அதைத்தொடர்ந்து இந்த சுற்றுப்பயணத்தில் கடைசியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் பும்ரா உள்ளிட்ட முதன்மை வீரர்கள் கொண்ட வலுவான இந்திய அணி களமிறங்குகிறது.
இதனால் இம்முறையாவது தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சாதிக்குமா எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்த நிலையில் இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய டெஸ்ட் அணியிலிருந்து தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குறிப்பாக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் 2ஆவது போட்டியில் காயத்தை சந்தித்த அவர் 3ஆவது போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில் அவரது வலது கை விரலில் சந்தித்த காயத்தை சோதித்ததில் குணமடைவதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படும் என்று முடிவுகள் வெளியானதாக தெரிகிறது. இதனால் இத்தொடரிலிருந்து ருத்ராஜ் விலகுவதாக தெரிவித்துள்ள பிசிசிஐ அவருக்கு பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.