
தென் ஆப்பிரிக்காவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 லீக் தொடர் ரசிகர்களின் கவணத்தை ஈர்த்து வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 6ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய கேப்பிட்டல்ஸ் அணியில் நட்சத்திர வீரர் பிலிப் சால்ட் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரைலி ரூஸொவும் அதிரடியாக விளையாடி 20 ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் வில் ஜேக்ஸ் மற்றும் தியூனிஸ் டி புரூயின் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சை சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசித்தள்ளினர். இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் வில் ஜேக்ஸ் தனது அரைசதத்தையும் கடந்து அசத்தினார்.