SA vs AUS, 4th ODI: சதத்தை தவறவிட்ட அலெக்ஸ் கேரி; தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-2 என்ற கணக்கில் தொடரையும் தக்கவைத்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியும், தென் ஆப்பிரிக்க அணி 3ஆவது போட்டியிலும் என வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் நீடிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று செஞ்சூரியனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. மேலும் இன்றைய போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு ஓய்வளிக்கபட, ஐடன் மார்க்ரம் அணியை தலைமை தாங்கினார்.
Trending
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் - ரீஸா ஹென்றிக்ஸ் தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பத்திலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ஹென்றிஸ்க் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் 8 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டி காக் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின் இணைந்த ரஸ்ஸி வெண்டர் டுசென் - ஹென்ரிச் கிளாசென் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியையும் சரிவிலிருந்து மீட்டனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 62 ரன்களைச் சேர்த்திருந்த வேண்டர் டூசென் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து கிளாசெனுடன் இணைந்த மில்லரும் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அதேசமயம் மறுபக்கம் ஹென்ரிச் கிளாசென் சிக்சர்களாக விளாசித்தள்ளி 57 பந்துகளில் தனது 4ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மறுப்பகம் டேவிட் மில்லர் தனது பங்கிற்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 23ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மறுபக்கம் ஹென்ரிச் கிளசென் 77 பந்துகளில் தனது 150 ரன்களைக் கடந்தார்.
மைதானத்தில் ருத்தரதாண்டவமாடிய இருவரும் இணைந்து வெறும் 77 பந்துகளில் 200 ரன்களை பார்ட்னர்ஷிப்பை கடந்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 416 ரன்களை குவித்தது. இதில் இறுதிவரை களத்தில் இருந்த ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 13 பவுண்ட்ரி, 13 சிக்சர்கள் என 174 ரன்களையும், டேவிட் மில்லர் 6 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 82 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் மிட்செல் மார்ஷும் 6 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். இதனைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 17 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லபுஷாக்னே 20 ரன்களுக்கும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 18 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த அலெக்ஸ் கேரி - டிம் டேவிட் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் டிம் டேவிட் 35 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த மைக்கேல் நேசர், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் இறுதிவரை போராடி வந்த அலெக்ஸ் கேரி சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 99 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டைழந்து ஒரு ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய லுங்கி இங்கிடி 4 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இந்த ஒருநாள் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன்செய்து தொடரை தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now