
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது இன்று (நவம்பர் 08) டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கடந்த போட்டியில் சதமடித்த கையோடு இப்போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் அதே ஃபார்மை தொடர்ந்து பவுண்டரிகளை விளாசினார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 7 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
பின்னர் சாம்சனுடன் இணைந்த கேப்டன் சூர்யகுமார் யாதவும் பவுண்டரிகளை பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தொடங்கியது. இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாட இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது. அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 21 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய திலக் வர்மாவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயரத்தொடங்கியது. அதேசமயம் மறுபக்கம் சிக்ஸர்களாக பறக்கவிட்ட சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் தனது இரண்டாவது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்தார்.