
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டோனி டி ஸோர்ஸி மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டோனி டி ஸோர்ஸியும், 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரியான் ரிக்கெல்டனும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டனர்.
பின்னர் களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசென் 8 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்க அணி 88 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து இணைந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ஹென்ரிச் கிளாசென் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்க்ரம் 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.