
இலங்கை அணி தற்சமயம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (நவம்பர் 27) டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்க்ரம் - டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஐடன் மார்க்ரம் 9 ரன்னிலும், டோனி டி ஸோர்ஸி 4 ரன்னிலும் என விக்கெட்டி இழக்க, அடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 16 ரன்களூக்கும், டேவிட் பெட்டிங்ஹாம் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20.4 ஓவர்கள் முடுவில் 4 விக்கெட்டுகளை இழப்பிற்கு 80 ரன்களைச் சேர்த்த நிலையில், மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியின் முதல்நாள் ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் டெம்பா பவுமா 28 ரன்களுடனும், கைல் வெர்ரைன் 9 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் கைல் வெர்ரையன் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வியான் முல்டர், மார்கோ ஜான்சென், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மஹாராஜ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதற்கிடியில் டெம்பா பாவுமா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில் 70 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.