
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை.
அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஐடன் மார்க்ரம், டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த ரியான் ரிக்கெல்டன் - கேப்டன் டெம்பா பவுமா இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து அபாரமாக விளையாடியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதில் டெம்பா பவுமா 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 78 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டேவிட் பெட்டிங்ஹாமும் 6 ரன்னுடன் ஆட்டமிழந்தார்.
அதேசமயம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரியான் ரிக்கெல்டன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 11 பவுண்டரிகளுடன் 101 ரன்களை எடுத்த நிலையில் ரிக்கெல்டன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்கோ ஜான்சனும் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கைல் வெர்ரைன் 48 ரன்களுடனும், கேசவ் மஹாராஜ் ரன்கள் ஏதுமின்றியும் இன்னிங்ஸை தொடங்கினர்.