
தென் ஆப்பிரிக்காவின் உள்ளூர் டி20 தொடரான எஸ்ஏ20 லீக் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும், கேப்டவுன் அணியின் பந்துவீச்சை சிதறடித்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 69 ரன்களை எடுத்திருந்த ஜேன் ராய் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 54 ரன்களை எடுத்திருந்த ஜோஸ் பட்லரும் தனது விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஃபாபியன் ஆலனும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து நடையைக் கட்ட, கேப்டன் டேவிட் மில்லர் 24 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பார்ல் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எடுத்தது. கேப்டவுன் அணி தரப்பில் நுவான் துஷாரா 2 விக்கெட்டுகளையும், தாமஸ் கேபர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.