
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் பிராண்டன் கிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி காக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில், அவரைத்தொடர்ந்து 3 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பிராண்டன் கிங்கும் விக்கெட்டை இழந்தார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பிரைஸ் பெர்சன்ஸும் 16 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதன்பின் சிறப்பாக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் அரைசதம் அடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசெனும் 13 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.