எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேபை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது எம்ஐ கேப்டவுன்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான எஸ்ஏ20 லீக் இறுதிப்போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எம்ஐ கேப்டவுன் அணி இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக முன்னேறிய நிலையில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியானது இன்று (பிப்ரவரி 08) ஜோஹன்னஸ்பர்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து சன்ரைசர்ஸ் அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய கேப்டவுன் அணிக்கு ரஸ்ஸி வேண்டர் டுசென் - ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த ரியான் ரிக்கெல்டன் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரீஸா ஹென்றிக்ஸும் ரன்கள் ஏதுமின்றி பெவிலியன் திரும்பினார்.
Trending
அதன்பின் மற்றொரு தொடக்க வீரர் ரஸ்ஸி வேண்டர் டுசெனும் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாட முயன்ற ஜார்ஜ் லிண்டோவும் 3 சிக்ஸர்களுடன் 20 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் கேப்டவுன் அணி 93 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த கானர் எஸ்டெர்ஹுய்சென் - டெவால்ட் பிரீவிஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டெவால்ட் பிரீவிஸ் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 38 ரன்னிலும், எஸ்டெர்ஹுய்சென் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 39 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற, எம்ஐ கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரிச்சர்ட் க்ளீசன், மார்க்கோ ஜான்சன் மற்றும் லியாம் டௌசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டேவிட் பெடிங்ஹாம் - டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டெவிட் பெடிங்ஹாம் 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜோர்டன் ஹார்மனும் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டோனி டி ஸோர்ஸி - டாம் அபெல் இணை ஓரளவு தக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின் அதிரடியாக விளையாடிய டாம் அபெல் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் 6 ரன்களுக்கும், டோனி டி ஸோர்ஸி 26 ரன்களுடனும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 15 ரன்களைச் சேர்த்த நிலையில், மார்கோ ஜான்சென், ஆண்டில் சிமலானே, லியாம் டௌசன், கிரெய்க் ஓவர்டன், ரிச்சர்ட் கிளீசன் உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் சன்ரைசர்ஸ் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டவுன் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய காகிசோ ரபாடா 4 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட் விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் எம்ஐ கேப்டவுன் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் எஸ்ஏ20 லீக் தொடரில் எம்ஐ கேப்டவுன் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது. இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு காரணமக இருந்த டிரென்ட் போல்ட் ஆட்டநாயகன் விருதையும், தொடர் முழுவதும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்கோ ஜான்சன் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now