எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி எம்ஐ கேப்டவுன் அணி அபார வெற்றி!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய கேப்டவுன் அணிக்கு செதிகுல்லா அடல் மற்றும் கானர் எஸ்டெர்ஹுய்சென் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டனர். இதன்மூலம் அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதில் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 74 ரன்களைச் சேர்த்திருந்த செதிகுல்லா அடல் தனது விக்கெட்டை இழந்தார்.
Trending
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் காலின் இங்க்ரம் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கானர் எஸ்டெர்ஹுய்சென் அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், அவருடன் இணைந்த டெலானோ போட்ஜீட்டரும் அபாரமாக விளையாடி பவுண்டரிகளை விளாசினார். அதன்பின் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கானர் எஸ்டெர்ஹுய்சென் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 69 ரன்களுக்கு ஆட்டமிழக்க, டெலானோ போட்ஜீட்டரும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் கிறிஸ் பெஞ்சமின் ரன்கள் ஏதுமின்றியும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜார்ஜ் லிண்டே 4 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 8 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் எம்ஐ கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்தது. கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேப்பிட்டல்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் வில் ஜேக்ஸ், ஸ்டீவ் ஸ்டோல்க் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வில் ஸ்மீத் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 15 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் கைல் வெர்ரைன், மார்கஸ் அக்கர்மென் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த கீகன் லயன் கேஷெட் மற்றும் ஜேம்ஸ் நீஷம் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் கீகன் லயன் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களை சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சேனுரன் முத்துசாமியும் 7 ரன்களில் நடையைக் கட்டினார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜேம்ஸ் நீஷம் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 32 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் கேப்பிட்டல்ஸ் அணி 14 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டவுன் தர்பபில் டேன் பீட், தாமஸ் கபெர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் எம்ஐ கேப்டவுன் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now