எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது பார்ல் ராயல்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளத்.
தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் இன்று பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 7 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அதன்பின் அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸும் 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய லியுஸ் டூ ப்ளூய், மோயீன் அலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
Trending
இதனால் சூப்பர் கிங்ஸ் அணி 36 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த நிலையில் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோவ் - சிபோனெலோ மகன்யா இணை நிதானமாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் இருவரும் இணைந்து 36 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சிபோனெலோ மகன்யா 17 ரன்களை எடுத்திருந்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து பேர்ஸ்டோவுடன் இணைந்த டோனோவன் ஃபெரீரா எப்போதும் போல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
அதுவரை நிதானம் காட்டிய ஜானி பேர்ஸ்டோவ் 19ஆவாது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 60 ரன்களை எடுத்திருந்த ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபெரீரா ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களைச் சேர்த்தது. பார்ல் ராயல்ஸ் தரப்பில் பிஜோர்ன் ஃபோர்டுயின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் ஆதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த நிலையில், 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரர் ஜோ ரூட் 6 ரன்களுக்கும், ருபின் ஹார்மென் 19 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த மிட்செல் வான் பியூரன் மற்றும் கேப்டன் டேவிட் மில்லர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியை வெற்றியை நோக்கியும் அழைத்துச் சென்றனர்.
Also Read: Funding To Save Test Cricket
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் வான் பியூரன் 44 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் டேவிட் மில்லர் 40 ரன்களைச் சேர்த்ததுடன் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பார்ல் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now