SA20 League: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரான எஸ்ஏ20-இல் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - பிரிடோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிடோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 45 (50), கேப்டன் டூ பிளஸி 27 (16) இருவரும் ஓரளவுக்கு சிறந்த தொடக்கத்தை கொடுத்து அடித்தளம் அமைத்தனர்.
Trending
அதனைத் தொடர்ந்து ஒன்டவுன் வீரர் லியுஸ் டு ப்ளூய் 40 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 75 ரன்களை குவித்து அசத்தினார். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதையடுத்து இலக்கை துரத்திக் களமிறங்கிய பிரிடோரியா கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் பிலிப் சால்ட் 29 (15), வில் ஜாக்ஸ் 16 (13) ஆகியோர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தொடர்ந்து களமிறங்கிய ரைலி ரூஸோவும் கோல்டன் டக் ஆனார்.
அடுத்து களமிறங்கிய டாட்ஸ்வெல் 22, ஜேம்ஸ் நீஷம் 24, கேப்டன் பர்னல் 19 (17) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இறுதியில் 6 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆதில் ரஷித், பர்னல் இருவரும்தான் களத்தில் இருந்தார்கள்.
முதல் நான்கு பந்துகளில் மூன்று ரன்களை மட்டும்தான் அடிக்க முடிந்தது. கடைசி இரண்டு பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டபோது, ரோமாரியோ செய்பர்ட் பந்தில் ஆதில் ரஷித் 8 ஆட்டமிழந்தார். இறுதியில், கடைசிப் பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டபோது, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே ஆட்டமிழந்தார்.
இதனால், 20 ஓவர்கள் முடிவில் பிரிடோரியா கேப்பிட்டல்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஆரோன் பங்கிசோ 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now