
தென் ஆப்பிரிக்கவின் எஸ்ஏ20 லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று செஞ்சூரியனில் நடிபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா அணியின் தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 3ஆம் வரிசையில் இறங்கிய ரைலீ ரூஸோவும் 20 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுனௌயில் அதிரடியாக விளையாடி அதிவேகமாக ஸ்கோரை உயர்த்திய தொடக்க வீரர் வில் ஜாக்ஸ் அரைசதம் அடித்தார். 3ஆவது விக்கெட்டுக்கு அவருடன் இணைந்து சிறப்பாக விளையாடிய டி புருய்ன் 23 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 42 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து சதத்தை நெருங்கிய வில் ஜாக்ஸ் 46 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 92 ரன்களை குவித்து 8 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். வில் ஜாக்ஸ் 200 ஸ்டிரைக் ரேட்டில் ஆடி 46 பந்தில் 92 ரன்களை குவிக்க, அவரது அதிரடியால் 20 ஓவரில் 216 ரன்களை குவித்த கேப்பிட்டல்ஸ் அணி, 217 ரன்கள் என்ற கடின இலக்கை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு நிர்ணயித்தது.