பும்ராவின் இடத்தை முகமது ஷமி நிரப்புவார் - சபா கரீம்!
பும்ரா இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் இந்திய அணியின் தேர்வாளருமான சபா கரீம் கருத்து தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெறும் கடைசி டி20 தொடரான தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது பங்கேற்று விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதல் போட்டி முடிவடைந்த வேளையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்தத் தொடரில் இடம்பெற்றிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறியுள்ளார்.
Trending
அதுமட்டுமின்றி முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த காயம் குணமடைய இன்னும் சில மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளதால், அவர் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் வெளியேறியுள்ளார். இந்நிலையில் பும்ராவிற்கு பதிலாக இந்திய அணியில் முகமது சிராஜ் தற்காலிகமாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் பும்ரா இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் இந்திய அணியின் தேர்வாளருமான சபா கரீம் கூறுகையில், “பும்ரா ஒரு தனித்துமான பந்துவீச்சாளர். அவர் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய இழப்புதான்.
பவர்பிளே ஓவர்களில் முதல் இரண்டு ஓவர்களை அற்புதமாக வீசி விக்கெட் எடுத்து கொடுக்கவும், பின்னர் கடைசி கட்ட டெத் ஓவர்களில் வந்து ரன்களை கண்ட்ரோல் செய்தும் சிறப்பாக பந்து வீசக்கூடியவர் பும்ரா. அவர் இல்லாதது இந்திய அணிக்கு கடினமான ஒன்று. அதுமட்டும் இன்றி பும்ரா இல்லாமல் டெத் ஓவரில் இந்திய அணி எவ்வாறு பந்து வீசப் போகிறது என்பது தெரியவில்லை.
நிச்சயம் பும்ரா இல்லாமல் இந்திய அணி இறுதி கட்ட ஓவர்களை வீச கஷ்டப்படும் என்று நினைக்கிறேன். ஆனால் அதனை சரி செய்ய மற்ற பந்துவீச்சாளர்கள் முன் வந்து தங்களது சிறப்பான பந்துவீச்சை அளிக்க வேண்டும்.
என்னை பொறுத்தவரை இந்திய அணியின் தற்போதைய முதன்மை வீரர்களாக புவனேஸ்வர் குமார், முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரே இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதிலும் பும்ராவின் இடத்தை முகமது ஷமியால் நிரப்ப முடியும் என நம்புகிறேன். அவர்கள் தங்களது பந்துவீச்சினை சிறப்பாக அளித்தால் மட்டுமே டெத் ஓவர்களில் இந்திய அணியில் உள்ள பிரச்சனை தீரும் ”என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now