சஞ்சு சாம்சனால் நிலைத்தன்மையை அவரால் காட்ட முடிவதில்லை - சபா கரீம்!
சாம்சன் இடம் எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் அவர் திறமையானவர். ஆனால் துரதிஷ்டவசமாக தனது பேட்டிங்கில் நிலைத்தன்மையை அவரால் காட்ட முடிவதில்லை என சபா கரீம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முழுமையாக இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது. அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோற்றதாலும் அடுத்து உலகக்கோப்பை இருப்பதாலும், இந்திய அணிக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானது.
இந்த சுற்றுப்பயணத்திற்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் இசான் கிஷானோடு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது சஞ்சு சாம்சன் குறித்து இந்திய தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் சபா கரீம் சில விஷயங்களை குறிப்பிட்டு பரபரப்பான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். இவருடைய முந்தைய இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு இவர் இடம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Trending
இதுகுறித்து பேசிய அவர், “தற்போது உங்களிடம் வீரர்கள் இல்லாததால் சஞ்சு சாம்சன் உங்கள் அணியில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி தமது அணியில் உள்ள வீரர்களுக்கு சவால் கொடுக்கும்படி விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். சஞ்சு சாம்சனால் துரதிஷ்டவசமாக அதைச் செய்ய முடிவதில்லை. ஐபிஎல் தொடரை எடுத்துக் கொண்டால், அவர் அவ்வப்போது சரியாகச் செயல்பட்டார்.
இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வருமா இருவரும் பேட்டிங்கில் காட்டிய ஒழுங்கை அவரிடம் நம்மால் பார்க்க முடியவில்லை. அவரிடமும் இதே போல் பார்க்க விரும்புகிறேன் ஆனால் அது மிஸ் ஆகிறது. சாம்சன் இடம் எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் அவர் திறமையானவர். ஆனால் துரதிஷ்டவசமாக தனது பேட்டிங்கில் நிலைத்தன்மையை அவரால் காட்ட முடிவதில்லை. இந்தக் காரணத்தால்தான் அவர் இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பெற முடியவில்லை என்று நான் உணர்கிறேன்.
சூரியகுமார் மற்றும் சஞ்சு சாம்சன் இருவருக்கும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணியில் இடம் தருவது நல்ல சவால் அளிக்கும் முடிவு. இதில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்கள் உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம் பெறுவார்கள். எனவே இதில் அவர்கள் திறமையைக் காட்டட்டும்” என்று கூறி இருக்கிறார்.
Win Big, Make Your Cricket Tales Now