
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று மும்பை நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் நியூசிலாந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு 397/4 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 47, ஷுப்மன் கில் 79* என தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி பெரிய ரன்களை குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.
அவர்களை விட மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடிய விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் 3வது விக்கெட்டுக்கு 256 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதமடித்தனர். அதில் விராட் கோலி 117 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 105 (70) ரன்களும் அடித்தனர். இறுதியில் கேஎல் ராகுல் தம்முடைய பங்கிற்கு 39* ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுதி 3 விக்கெட்களை சாய்த்தார்.
முன்னதாக இந்த போட்டியில் சதமடித்த விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை (49 சதங்கள்) முந்தி 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனை படைத்தார். அது போக இந்த உலகக் கோப்பையில் 711 ரன்கள் அடித்துள்ள அவர் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (2003இல் 673 ரன்கள்) வாழ்நாள் உலக சாதனையையும் தகர்த்தார்.