உலகக்கோப்பை தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஐசிசி தூதராக முன்னாள் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2023 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. நாளை முதல் தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 19ஆம் தேதி வரை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. மொத்தம் 10 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு முறையும் உலகக்கோப்பை தொடரின் தூதுவராக போட்டியை ஏற்று நடத்தும் அணியின் முன்னாள் வீரர் ஒருவரை ஐசிசி தேர்வு செய்யும்.
அந்த வகையில் இந்த முறை இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரரும், ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரை ஐசிசி தூதராக தேர்வு செய்துள்ளது. இது குறித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சச்சின் டெண்டுல்கர், இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக்கோப்பை தொடரால் பல இளம் சிறுவர், சிறுமியர் கிரிக்கெட் விளையாட்டை தேர்வு செய்து ஆடத் தொடங்குவார்கள் என கூறி இருக்கிறார்.
Trending
மேலும், தான் 1987 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்ற போது பந்தை எடுத்துப் போடும் சிறுவனாக மைதானத்தில் பணியாற்றிய நினைவுகளையும் பகிர்ந்தார். உலகக்கோப்பை தொடரில் பந்தை எடுத்துப் போட்ட சிறுவனாக இருந்து, பின் 2011இல் உலகக்கோப்பை வென்றது தான் தன் கிரிக்கெட் வாழ்வின் மணிமகுடம் என அவர் உலகக்கோப்பை குறித்த தன் மலரும் நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.
சச்சின் உலக அளவிலான தூதராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற அணிகளில் இருந்தும் முன்னாள் ஜாம்பவான்களையும் கவுரவப்படுத்தும் வகையில் அவர்களை ஐசிசி வல்லுநர் குழு உறுப்பினர்களாக அறிவித்துள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ், தென் ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ், இங்கிலாந்து உலகக் கோப்பை வென்ற கேப்டன் இயான் மோர்கன், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், நியூசிலாந்தின் ராஸ் டெய்லர், இந்தியாவின் சுரேஷ் ரெய்னா, முன்னாள் மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் பாகிஸ்தான் ஆல் - ரவுண்டர் முகமது ஹபீஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now