
கடந்த மாதம் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் அந்த அணி வீராங்கனை சார்லி டீன் பந்து வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறமிருந்து வெள்ளை கோட்டை விட்டு வெளியேறியதால் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ரன் அவுட் செய்தது பெரிய சர்ச்சையாக நிலவுகிறது. ஆரம்ப காலம் முதலே நடைமுறையில் இருந்து வரும் இவ்வகையான அவுட் ஒருமுறை இந்திய வீரர் வினோ மன்கட் செய்ததிலிருந்து பிரபலமாகி அவரது பெயரோடு அழைக்கப்பட்டதுடன் நேர்மைக்கு புறம்பானதாக பார்க்கப்பட்டு வந்தது.
ஏனெனில் தனது பார்ட்னர் பேட்ஸ்மேனை பார்த்துக்கொண்டே பெரும்பாலான சமயங்களில் தங்களை அறியாமல் வேகமாக சிங்கிள் எடுப்பதற்காக எதிர்புறம் இருக்கும் பேட்ஸ்மேன் பவுலர் பந்து வீசுவதற்கு முன்பாகவே கோட்டை விட்டு வெளியேறுவார்கள். அப்போது கவனம் பந்து வீச்சாளர் மேல் இல்லாமல் எதிர்ப்புறம் இருப்பதால் பவுலர் ரன் அவுட் செய்வதை அனைவரும் நேர்மைக்குப் புறம்பானதாக பார்க்கிறார்கள். ஆனால் நியாயப்படி பவுலர் ஒரு இன்ச் காலை வெளியே வைத்தாலும் உடனடியாக நோ-பால் வழங்கி அதற்கு தண்டனையாக பிரீ ஹிட் கொடுக்கப்படும் போது பேட்ஸ்மேன்கள் மட்டும் அப்படி ஒரு விதிமுறை இல்லாதது போல் முன்கூட்டியே வெளியேறி ரன் எடுப்பதற்கான சாதகத்தை உருவாக்கிக் கொள்வதாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருதினார்.
அதை களத்திலும் பின்பற்றிய அவர் 2019 ஐபிஎல் தொடரில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லரை மன்கட் செய்தார். அதற்காக உலகமே திட்டி தீர்த்தாலும் விதிமுறைக்கு உட்பட்டு செயல்பட்டதாக தனது கருத்தில் விடாப்பிடியாக நின்ற அஸ்வின் உலக அளவில் அனைத்து பவுலர்களும் அதை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார். அவரது தொடர்ச்சியான கோரிக்கையில் நியாயமிருந்ததால் கிரிக்கெட் விதிமுறைகளை நிர்வகிக்கும் லண்டனின் எம்சிசி அமைப்பு மன்கட் அவுட்டை நேர்மைக்குப் புறம்பான பிரிவிலிருந்து ரன் அவுட் பிரிவுக்கு மாற்றி அறிவிப்பு வெளியிட்டது. அதை ஐசிசியும் ஏற்றுக்கொண்ட நிலையில் தீப்தி சர்மா நேர்மைக்கு புறம்பாக செயல்பட்டதாக ஒட்டுமொத்த இங்கிலாந்தினரும் சேர்ந்து திட்டி தீர்த்தார்கள்.