
பாகிஸ்தான் நாட்டிற்கு பாதுகாப்பு காரணத்தை முன்வைத்து முன்னணி கிரிக்கெட் நாடுகள் யாரும் சென்று விளையாடாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இப்படியான பொருளாதார இழப்பு அந்த நாட்டின் உள்நாட்டு கிரிக்கெட் வளர்ச்சியை பெரும் அளவில் பாதித்தது. அடிமட்ட அளவில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட்டை வளர்க்க அவர்களுக்கு தேவையான நிதி இல்லை.
இந்தக் காரணத்தால் எப்படியாவது பெரிய அணிகளை தங்கள் நாட்டிற்கு வரவைத்து விளையாடுவதில் பாகிஸ்தான் மிகப்பெரிய முனைப்பு காட்டியது. இதனால் தங்கள் அணிகளுக்கு பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு பெரிய அணிகளின் வீரர்களை பயிற்சியாளர்களாக கொண்டு வந்தது. மேலும் பிஎஸ்எல் தொடருக்கு பாதுகாப்பு வசதிகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டது. சர்வதேச அளவிலும் அரசியல் சூழல்களில் மாறுதல் உண்டானது.
இதெல்லாம் சேர்ந்து பாகிஸ்தான் நாட்டிற்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற பெரிய நாடுகள் தற்பொழுது வந்து விளையாடிவிட்டு பத்திரமாக நாடு திரும்பியிருக்கின்றன. இதெல்லாம் நடந்தது ரமீஷ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த பொழுதுதான். மேலும் உலகக் கோப்பை போட்டி ஒன்றில் இந்திய அணியை பாகிஸ்தான் தோற்கடித்ததும் இவரது காலத்தில்தான். தற்பொழுது டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான அணி இறுதிப் போட்டிக்கு போனதும் இவரது காலத்தில்தான்.