
ஐசிசி டி20 உலகக் கோப்பை துணைப் பிராந்திய கிழக்கு ஆசிய பசிபிக் தகுதிச் சுற்றில் நேற்று நடைபெற்ற டி20 ஆட்டத்தில் சமோவா மற்றும் வனுவாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சமோவா அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய டேரியஸ் விஸர் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.
அதிலும் குறிப்பாக இன்னிங்ஸின் 15ஆவது ஓவரை வீசிய நலின் நிபிகோ பந்துவீச்சில் அடுத்தடுத்து 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். மேலும் அந்த ஓவரில் மூன்று நோபால்களும் அடங்கும். இதன்மூலம் அந்த ஒரே ஓவரில் டேரியஸ் விஸர் 39 ரன்களைச் சேர்த்து புதிய வரலாறும் படைத்தார். இதன்மூலம் தனது சதத்தையும் பதிவுசெய்த டேரியஸ் விஸர் 62 பந்துகளில் 14 சிக்ஸர்கள் 5 பவுண்டர்கள் என 132 ரன்களை குவித்தார்.
இதன்மூலம் சமோவா அணியானது 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வனுவாடு அணியில் நலில் நிபிகோ அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 73 ரன்களையும், ஜோஷுவா ராஸு 23 ரன்களையும், டிம் கட்லர் 21 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.