
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2 – 2 என்ற கணக்கில் சமநிலையுடன் முடிந்துள்ளது. இத்தொடரில் முதலிரண்டு போட்டிகாளில் தோல்வியடிந்து ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்த இந்தியா அதற்காக அஞ்சாமல் விசாகப்பட்டினம் மற்றும் ராஜ்கோட்டில் நடைபெற்ற அடுத்த 2 போட்டிகளில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் துல்லியமாக செயல்பட்டு பெரிய வெற்றிகளை சுவைத்தது.
அதனால் சொந்த மண்ணில் எங்களை சாய்ப்பது அவ்வளவு சுலபமல்ல என்று தென் ஆப்பிரிக்காவுக்கும் காட்டிய இந்தியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது. அந்த நிலைமையில் இந்த தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான 5ஆவது போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. ஆனால் மழையால் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு 7.50 மணிக்கு தொடங்கிய அப்போட்டியில் 28/2 என இந்தியா தடுமாறிக் கொண்டிருந்தபோது, வந்த மழை ஒரு மணி நேரம் அடித்து நொறுக்கியதால் இப்போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
அதனால் இரு அணிகளுமே இந்த தொடரின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பையை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வெடுத்த நிலையில் அவரின் இடத்தில் கேப்டனாக விளையாடிய ரிஷப் பந்த் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் என அனைத்திலும் மொத்தமாக சொதப்பினார். முதலில் ஒரு கேப்டனாக எந்த பவுலரை எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற சரியான அடிப்படையான முடிவை எடுப்பதில் தடுமாறிய அவர் சஹால் போன்ற பவுலர்கள் ஒருசில ஓவர்கள் சுமாராக வீசியதால் அவர்களின் திறமை மீது நம்பிக்கை இழந்து முழுமையான 4 ஓவர்களை கொடுக்கவில்லை.