
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் படுதோல்வியைச் சந்தித்தது.
இதனால் அணியின் மூத்த வீரர்கள் மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி குறித்தும், ரோஹித், விராட் கோலியின் ஃபார்ம் குறித்தும், ஆஸ்திரேலிய தொடர் குறித்தும் தனது கருத்துகளை தெரிவித்திருந்தார்.
ஆனால் அச்சயமயத்தில் விராட் கோலி குறித்து ரிக்கி பாண்டிங் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த கம்பீர், “ரிக்கி பாண்டிங்குக்கும் இந்திய கிரிக்கெட்டிற்கும் என்ன சம்பந்தம்? அவர் ஆஸ்திரேலியாவைப் பற்றி பேச வேண்டும். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை” என காட்டமான பதிலை வழங்கினார். கம்பீரின் இந்த பதிலானது சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.