
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன். தனது அதிரடியான ஆட்டத்திற்கு பெயர் போன இவர், தொடர்ச்சியாக ரன்களை சேர்க்க தவறியதால் இந்திய அணியில் உள்ளே, வெளியே என அணியில் தனது இடத்தை தக்கவைக்க முடியாமல் தவித்து வந்தார். ஆனால் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.
இருப்பினும் அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஜிம்பாப்வே, இலங்கை தொடர்களிலும் அவரால் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியவில்லை. பின், ரோஹித் சர்மாவின் ஓய்வு காரணமாக வங்கதேச டி20 தொடரில் அணியின் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட்டார். அத்தொடரின் கடைசி போட்டியில் சதமடித்து தனது இடத்தை ஓரளவு உறுதிசெய்தார்.
அதன்பின் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க தொடரிலும் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் அத்தொடரில் இரண்டு சதங்களை விளாசி தனது இடத்தை நிலை நிறுத்திக்கொண்டுள்ளார். இதன்மூலம் இந்திய டி20 அணியின் தொடக்க வீரர் இடத்தையும் அவர் ஏறத்தாழ உறுதிசெய்துள்ளார். இந்நிலையில் சஞ்சு சாம்சன் சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் உடன் யூடியுப் நேரலையில் பங்கேற்றார்.