
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் சஞ்சு சாம்சன். கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் சிறு வயதிலேயே தனது திறமையை ஐபிஎல் தொடர் மூலம் வெளிப்படுத்தியவர். இதனால் கடந்த 2015ஆம் ஆண்டே இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் இந்திய அணிக்காக 17 டி20 போட்டிகள், 11 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். தோனி இருந்தவரை எந்த விக்கெட் கீப்பருக்கும் வாய்ப்பு கிடைக்காத சூழலில், தோனி ஓய்வை அறிவித்த பின்னரும் விக்கெட் கீப்பங்/ பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனிடையே கரோனா வைரஸ் பரவலின் போது ஷிகர் தவான் தலைமையிலான இந்திய ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டிருந்தார். அதில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி அசத்தினார். இதனால் சஞ்சு சாம்சனை ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்தினால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆனால் இவருக்கு பதிலாக தேர்வு செய்யப்படும் இஷான் கிஷன் மோசமாக விளையாடி வந்தார். ஸ்பின், ஸ்விங் எந்த பந்துகளை எதிர்கொள்ள தெரியாமல் தொடக்க வீரர்களுக்கு உண்டான எந்த திறமையும் இல்லாமல் இந்திய அணியில் விளையாடி வந்தார். இதனால் ஒவ்வொரு முறையும் சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்படும் போதும், இந்திய அளவில் ரசிகர்களால் கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.