இந்திய அணி வருகிற ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான அணியில் சஞ்சு சாம்சன் எடுக்கப்பட்டிருக்கிறார்.
சஞ்சு சாம்சன் கடைசியாக நவம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடினார். அதன் பிறகு காயம் ஏற்பட்டதால் தொடர்ந்து விளையாட முடியாமல் இருந்த அவரை மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடக்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் எடுத்துள்ளது பிசிசிஐ.
சஞ்சு சாம்சன் 2015ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணியில் விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் டி20 போட்டிகளில் விளையாடி வந்த அவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். அதன்பின் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் முறையாக ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் எடுக்கப்பட்டார். அதற்கு அடுத்த தொடரிலிருந்து கிட்டத்தட்ட ஓராண்டாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் எடுக்கப்பட்டார். அடுத்தடுத்து சில தொடர்களில் விளையாடினாலும் டி20 உலககோப்பையில் இவரை பிசிசிஐ எடுக்கவில்லை.