
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் கடைசி போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தனது விரல் பகுதியில் காயத்தை சந்தித்தார். இதனால் அவர் இப்போட்டியில் ஃபீல்டிங் செய்யவும் வரவில்லை. இதன் காரணமாக துருவ் ஜூரெல் மாற்று வீக்கெட் கீப்பராக செயல்பட்டார். இந்நிலையில் காயம் காரணமாக சஞ்சு சாம்சன் சுமார் 5 முதல் 6 வாரங்கள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின் படி, 'சாம்சனின் வலது ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவரது காயம் முழுமையாக குணமடைய அவருக்கு ஐந்து முதல் ஆறு வாரங்கள் ஆகும். அதன் பிறகு தான் அவரால் வலை பயிற்சியில் ஈடுபட முடியும், எனவே, பிப்ரவரி 8 முதல் புனேவில் நடைபெறும் ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டியில் கேரளாவுக்காக அவர் விளையாடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இருப்பினும் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.