
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 42ஆவது லீக் போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் ராஜஸ்தாஸ் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸின் கேப்டன் சஞ்சு சாம்சன் தவறவிடுவார் என்று கூறப்படுகிறது. அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியின் சஞ்சு சாம்சன் காயமடைந்ததுடன், ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் அவரது வலி தீவிரமடைந்தததை தொடர்ந்து மேற்கொண்டு அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை. இதனையடுத்து சஞ்சு சாம்சனுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.