
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு சுற்று ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மூன்றாம் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. அதன்படி இன்று தொடங்கிய 5ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணியை எதிர்த்து அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா டி அணி விளையாடியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து, இந்தியா டி அணி தரப்பில் தேவ்தத் படிக்கல் - ஸ்ரீகர் பரத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இவரும் இணைந்து தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்களது அரைசதங்களை பதிவுசெய்து முதல் விக்கெட்டிற்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 50 ரன்கள் எடுத்த நிலையில் படிக்கல் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 52 ரன்களை எடுத்திருந்த ஸ்ரீகர் பரத்தும் தனதி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரிக்கி புய் ஒருபக்கம் நிதானமாக விளையாடிய நிலையில், மறுமுனையில் விளையாடிய நிஷாந்த் சந்து 19 ரன்களுக்கும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ரிக்கியுடன் இணைந்த சஞ்சு சாம்சன் வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதில் ரிக்கி புய் அரைசதம் கடந்த நிலையில் 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.