
மும்பை அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பிரபலமடைந்தவர் சர்ஃப்ராஸ் கான். இவர் இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். மேலும் இதுவரை 66 முதல்தர கிரிக்கெட்டில் போட்டிகளில் விளையாடியுள்ள சர்ஃப்ராஸ் கான் 14 சதம், 11 அரைசதங்கள் என 3,912 ரன்களைச் சேர்த்துள்ளார்.
மேலும் அவரது பேட்டிங் சராசரியானது 69.85ஆக உள்ளது. இதனால் இவர் இந்திய அணியின் பிராட்மேன் என்றும் அழைக்கப்பட்டார். இருப்பினும் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார். அதன்பின் இந்திய ஏ அணிக்காக தேர்வுசெய்யப்பட்ட இவர் இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிராக 96, 04, 55 மற்றும் 161 ரன்களைக் குவித்து அசத்தினா.
அதேசமயம் இந்திய அணியின் கேஎல் ராகுல் காயம் காரணமாக நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலக, அந்த இடத்திற்கு சர்ஃப்ராஸ் கான் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் அப்போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான் முக்கிய வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.