விஜய் ஹசாரே கோப்பை: கர்நாடகாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சௌராஷ்டிரா!
விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதியில் கர்நாடகா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற சௌராஷ்டிரா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தியாவின் உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கர்நாடகா, சௌராஷ்டிரா, மகாராஷ்டிரா, அசாம் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதன்படி இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் கர்நாடகாவும் சௌராஷ்டிராவும் மோதின.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் கர்நாடகாவுக்கு எதிராக டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடகா அணியின் தொடக்க வீரர் சமர்த் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடினார். ஒருமுனையில் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த சமர்த் 88 ரன்களை குவித்து சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.
Trending
ஆனால் மயன்க் அகர்வால் 1, மனீஷ் பாண்டே 0 என சீனியர் வீரர்கள் படுமோசமாக சொதப்பினர். அவர்களுடன் ஷரத் 3, நிகின் ஜோஸ் 12, ஷ்ரேயாஸ் கோபால் 9 என அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, வெறும் 171 ரன்களுக்கு கர்நாடக அணி ஆல் அவுட்டானது. சௌராஷ்டிரா அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜெய்தேவ் உனாத்கத் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து 172 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய சௌராஷ்டிரா அணியின் தொடக்க வீரர்கள் ஹர்விக் தேசாய் மற்றும் ஷெல்டான் ஜாக்சன் ஆகிய இருவருமே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். அதன்பின் 3ஆம் வரிசை வீரர் ஜெய் கோஹில் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்து 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து மன்கத் 35 ரன்களையும், சமர்த் வியாஸ் 33 ரன்களையும் சேர்க்க,37ஆவது ஓவரில் சௌராஷ்டிரா அணி இலக்கை எட்டியது. இதன்மூலம் சௌராஷ்டிரா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடக அணியை வீழ்த்தி விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மேலும் இப்போட்டியில் பந்துவீச்சில் அசத்திய ஜெய்தேவ் உனாத்கட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now