
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்து முடிந்தது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன, டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதனையடுத்து வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சவுத்ரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்கம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீசு அழைத்தார். அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டோனி டி ஸோர்ஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் வியான் முல்டர் ஆகியோர் சதங்களை அடித்து மிரட்ட, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 572 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
இதில் அதிகபட்சமாக டோனி டி ஸோர்ஸி 177 ரன்களையும், வியான் முல்டர் 105 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 106 ரன்களிஅயும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையாடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமாளித்தனர். இருப்பினும் மொமினுல் ஹக் மட்டுமே ஓரளவு தாக்குபிடிதத்துடன் அரைசதம் கடந்து 82 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.