
இங்கிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது ப்ளூம்ஃபோன்டைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணியானது மையா பௌச்சர் மற்றும் நாட் ஸ்கைவர் பிரண்ட் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 395 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக நாட் ஸ்கைவர் பிரண்ட் 128 ரன்களையும், மையா பௌச்சர் 126 ரன்களையும் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்களைச் சேர்த்திருந்தது.
இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை லாரா வோல்வார்ட் 8 ரன்களுடனும், அன்னேக் போஷ் 6 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் அன்னேக் போஷ் 6 ரன்னுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் வோல்வார்ட்டுடன் இணைந்த அன்னேரி டெர்க்சனும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் வோல்வார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் லாரா வோல்வார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில் 65 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.