
இலங்கை மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இலங்கை மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து தொடங்கிய இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. அதன்பின் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - லாரா குட்ஆல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். பின் லாரா குட்ஆல் 31 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டெல்மி டக்கர், சுனே லூஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லாரா வோல்வார்ட் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடி வந்த மரிஸான் கேப் 36 ரன்களுக்கும், நதின் டி கிளார்க் 35 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டனர். ஆனாலும் இப்போட்டியில் இறுதிவரை தனது அதிரடியைக் கைவிடாத கேப்டன் லாரா வோல்வார்ட் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசித் தள்ளினார்.