
ஆஸ்திரேலிய அணியானது முதல் முறையாக ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று எடின்பர்க்கில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர். கடந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல சாதனைகளை குவித்த டிராவிஸ் ஹெட் இன்றைய போட்டியில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். அவரைத்தொடர்ந்து இன்றைய ஆட்டத்திலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 16 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் அந்த அணி 23 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் இணைந்த ஜோஷ் இங்கிலிஸ் - கேமரூன் கிரீன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேமரூன் க்ரீனும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்த, மறுபக்கம் ஜோஷ் இங்கிலிஷ் அதிரடியில் மிரட்டினார்.